ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயார்- ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பதால் ஆண்டின் இறுதிக்குள் நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. ஒத்திவைத்தால் அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பரில் ஐ.பி.எல். போட்டியை நடத்திடலாம் என்பதே பி.சி.சி.ஐ.-யின் திட்டமாகும்.

ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் வெளிநாட்டிற்கு ஐ.பி.எல். போட்டியை மாற்றுவது குறித்தும் பி.சி.சி.ஐ யோசித்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று அமீரக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் முபாஷ்ஷிர் உஸ்மானி கூறுகையில், ‘நாங்கள் ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக (2014-ம் ஆண்டில் தொடக்க கட்ட லீக் ஆட்டங்கள் இங்கு நடந்தது) நடத்தியிருக்கிறோம். அது மட்டுமின்றி கடந்த காலங்களில் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாடுகளுடைய கிரிக்கெட் நடவடிக்கைகளின் பொதுவான இடமாக இருந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். நவீனகாலத்திற்கு ஏற்ற ஸ்டேடியங்களும், வசதி வாய்ப்புகளும் உள்ளதால் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த விரும்பக்கூடிய ஒரு இடமாக இது உள்ளது.

எங்களது மைதானங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே இங்கிலாந்து அணி பங்கேற்ற பல போட்டிகளை இங்கு நடத்தி உள்ளோம். அதனால் அவர்களின் உள்ளூர் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளோம். எங்களது அழைப்பை இவ்விரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களில் யார் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் போட்டிகளை நடத்த மகிழ்ச்சியோடு தயாராக இருக்கிறோம்’ என்றார்.

முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இறுதியான முடிவை எடுத்த பிறகே ஐ.பி.எல்.-ன் தலைவிதி குறித்து தீர்மானிக்க வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயார்- ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு"

Leave a comment

Your email address will not be published.