ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றி

நேற்று இரவு துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே உதனா பந்து வீச்சில் பிரித்வி ஷா 3 பவுண்டரிகள் விளாசி அமர்க்களமாக ரன் வேட்டையை தொடங்கினார்.

அணியின் ஸ்கோர் 68 ரன்னாக இருந்த போது பிரித்வி ஷா 42 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து நேர்த்தியாக ஆடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 32 ரன் எடுத்த நிலையில் உதனா பந்து வீச்சில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து கலக்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மொயீன் அலி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ், ரிஷாப் பண்டுடன் ஜோடி சேர்ந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார். அவர் மொயீன் அலி வீசிய ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியும், நவ்தீப் சைனி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியும் தெறிக்க விட்டார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

பின்னர் 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. தேவ்தத் படிக்கல் 4 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 9 ரன்னிலும், மொயீன் அலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் நிலைத்து நின்று போராடிய கேப்டன் விராட்கோலி 39 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரபடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் அந்த அணியின் நம்பிக்கையும் கரைந்து போனது.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 4-வது வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றி"

Leave a comment

Your email address will not be published.