ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 5-வது வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 5-வது வெற்றியை ருசித்தது.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஆரோன் பிஞ்ச், பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் சிக்சர் தூக்கி அசத்தினார். கம்மின்ஸ் ஓவரிலும், பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்டினார். பவர்பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

ரஸ்செல் வீசிய ஓவரில் முதல் பந்தில் சிக்சர் தூக்கிய தேவ்தத் படிக்கல் அதே ஓவரில் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். நன்றாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 37 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து டிவில்லியர்ஸ், கோலியுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் அதிரடியாக மட்டையை சுழற்றினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் 83 ரன்கள் திரட்டப்பட்டது. விராட்கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்களும், டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. டாம் பான்டன் 8 ரன்னிலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும், சுப்மான் கில் 34 ரன்னிலும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும், இயான் மோர்கன் 8 ரன்னிலும், ரஸ்செல் 16 ரன்னிலும், கம்மின்ஸ் 1 ரன்னிலும், ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

7-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி 5-வது வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது"

Leave a comment

Your email address will not be published.