ஐ.பி.எல்.கிரிக்கெட்: பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்ஸ்டோ

அபுதாபியில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின.

டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.இதன்படி வார்னரும், பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். காட்ரெலின் முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரியுடன் அதிரடிக்கு சுழி போட்டார். நங்கூரம் பாய்ச்சியது போல் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு விளையாடிய இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தனர்.

அதன் பிறகு பேர்ஸ்டோ ரன்வேகத்தை தீவிரப்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்த அவர், ரவி பிஷ்னோய், மேக்ஸ்வெல், முஜீப் ரகுமானின் ஓவர்களில் தலா 2 சிக்சர் வீதம் தெறிக்க விட்டார்.

அணியின் ஸ்கோர் 160 ரன்களாக உயர்ந்த போது வார்னர் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதே ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆக, 3 ரன்னில் சதத்தை தவற விட்டார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. வார்னர் – பேர்ஸ்டோ ஆடிய விதத்தை பார்த்த போது அவர்களின் ஸ்கோர் 220 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. கடைசியில் 200 ரன்களை எட்டுவதே பெரும்பாடாகிப்போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கேன் வில்லியம்சன் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். அபிஷேக் ஷர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 202 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் கேப்டன் லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் நிகோலஸ் பூரன் ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் ஆட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தது. எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். தனிநபராக போராடிய நிகோலஸ் பூரன் 77 ரன்களில் ரஷித்கானின் சுழலில் கேட்ச் ஆனார். அத்துடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

முடிவில் பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித்கான் 3 விக்கெட்டும், நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 6-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 5-வது தோல்வியாகும்.

Be the first to comment on "ஐ.பி.எல்.கிரிக்கெட்: பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்ஸ்டோ"

Leave a comment

Your email address will not be published.


*