ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 6-வது வெற்றி: ராஜஸ்தானை தோற்கடித்தது

நேற்றிரவு துபாயில் நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு உற்சாகமான தொடக்கம் கிடைக்கவில்லை. பிரித்வி ஷா அடுத்து வந்த ரஹானே இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேற்றினார்.

இதன் பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து விடுவித்து தூக்கி நிறுத்தினர். அபாரமாக ஆடிய தவான் நடப்பு தொடரில் 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது 180 ரன்களை நெருங்கும் போல் கணிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது.

இதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை விரட்டினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன் விளாசி தடாலடி தொடக்கம் கொடுத்தார். ஆனால் 2-வது விக்கெட்டுக்கு கால்பதித்த ஸ்டீவன் சுமித் தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் பென் ஸ்டோக்சும், சஞ்சு சாம்சனும் துரிதமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 86 ரன்களை எட்டிய போது பென் ஸ்டோக்ஸ்கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சனும் பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் நெருக்கடிக்குள்ளானது. அதைத் தொடர்ந்து ரியான் பராக் 1 ரன்னிலும், ராபின் உத்தப்பா 32 ரன்னிலும் நடையை கட்ட, டெல்லி அணியின் கை ஓங்கியது.

19-வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய ரபடா அந்த ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை சாய்த்ததோடு 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.

இதையடுத்து கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வீசினார். முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானின் ஹீரோவாக திகழ்ந்த ராகுல் திவேதியா களத்தில் நின்றும் இந்த முறை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 8 ரன் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 6-வது வெற்றி: ராஜஸ்தானை தோற்கடித்தது"

Leave a comment

Your email address will not be published.


*