ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி ராஜஸ்தானிடம் வீழ்ந்தது

சார்ஜாவில் நேற்றிரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜெய்ஸ்வால் தீபக் சாஹரின் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஸ்டீவன் சுமித்துடன் கைகோர்த்தார்.

இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 மெகா சிக்சர் தூக்கிய அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர் தெறிக்க விட்டு, மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 132 ரன்களாக உயர்ந்த போது சஞ்சு சாம்சன் 74 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த டேவிட் மில்லர் அதே ஓவரில் ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் ராஜஸ்தானின் ரன்வேகம் சற்று தணிந்ததுடன், விக்கெட்டுகளும் விழுந்தன. 230 ரன்களை நெருங்குவது போல் சென்ற அவர்களின் உத்வேகத்தை 13-வது ஓவருக்கு பிறகு சென்னை பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். ஆனாலும் கடைசி ஓவரில் கோட்டை விட்டனர். நிகிடி வீசிய இந்த ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிச்சர் விளாசி வியப்பூட்டினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.

அடுத்து 217 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ரன்னிலும், முரளிவிஜய் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ரன்களில் கேட்ச் ஆனார்.

அதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி ராஜஸ்தானிடம் வீழ்ந்தது"

Leave a comment

Your email address will not be published.


*