ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது

‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்த புதிய வியூகத்துக்கும் பலன் கிடைக்கவில்லை. பிளிஸ்சிஸ் (0) சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார். இதன் பின்னர் சாம் கர்ரனுடன், ஷேன் வாட்சன் இணைந்தார். கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அமர்க்களப்படுத்திய சாம்கர்ரன் சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் ஏமாந்து போல்டு ஆகிப்போனார்.

இதைத் தொடர்ந்து வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து மிடில் ஓவர்களில் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். இதன் பின்னர் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். கடைசி ஓவரில் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 160 ரன்களை கடக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சென்னை பவுலர்கள் சீக்கிரமாகவே கபளீகரம் செய்தனர். கேப்டன் டேவிட் வார்னர் (9 ரன்), சாம்கர்ரனின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ (23 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே (4 ரன்) ரன்-அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை கொடுத்தார். நேர்த்தியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் அவரும் நெருக்கடிக்குள்ளானார். மறுமுனையில் பிரியம் கார்க் 16 ரன்னிலும், விஜய் சங்கர் 12 ரன்னிலும் வீழ்ந்தனர்.

சென்னை அணியினரை அச்சுறுத்திக்கொண்டிருந்த வில்லியம்சன் 18-வது ஓவரில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சை சிக்சருக்கு அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். அதன் பிறகே சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அடுத்து வந்த ரஷித்கான் 14 ரன்னில் அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி சிக்கலின்றி வெற்றியை உறுதி செய்தார்.

Be the first to comment on "ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது"

Leave a comment

Your email address will not be published.