ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-10035

மும்பை: ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று எம்சிஏ மைதானத்தில்  பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.  

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரரான விருத்திமான் சஹா 5(11) ரன்னுடன் மோக்சின் கான் பந்துவீச்சில் வெளியேற, அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களான மாத்யூ வேட் 10(7) ரன்களுடனும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11(13) ரன்களுடனும் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இதனால் குஜராத் அணி 9.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில்-டேவிட் மில்லர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இதில் சுப்மன் கில் நிதானமாக விளையாட, மில்லர் அதிரடியாக விளையாட முற்பட்டு 26(24) ரன்களுடன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி 7 பவுண்டரிகள் விளாசிய சுப்மன் கில் 63(49) ரன்களுடனும், அவருடன் இணைந்து 4 பவுண்டரி அடித்த ராகுல் தெவாட்டியா 22(16) ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தனர்.  இதனால் குஜராத் அணி 20 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 144 ரனகள் எடுத்தது.

இதையடுத்து எளிய இலக்கு என நினைத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரர்களான குயிண்டன் டிக் காக் 11(10) ரன்களுக்கும், கேப்டன் கே.எல்.ராகுல் 8(16) ரன்களுக்கும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர்.

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களான கரன் ஷர்மா 4(4), குர்னால் பாண்டியா 5(5) ,ஆயுஷ் பதோனி 8(11), மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2(2), ஜேசன் ஹோல்டர் 1(2), மோக்சின் கான் 1(3), ஆவேஷ் கான் 12(4) என அனைவரும் குஜராத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க திணறி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த தீபக் ஹூடா தனியொரு ஆளாக போராடி ரன்களை குவிக்க முற்பட்டார். இருப்பினும் 3 பவுண்டரி உட்பட 27(26) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 13.5 ஓவர்களில் லக்னோ அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  இதன்மூலம் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. அதுமட்டுமின்றி இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது

Be the first to comment on "ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது."

Leave a comment

Your email address will not be published.


*