ஐபிஎல் 2022: லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூர் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10094

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் முதல் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபாப் டூப்ளெசிஸ், மோஹ்சின் கான் பந்துவீச்சில் கோல்டன் டக்கவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி-ராஜத் படிதர் ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.இருப்பினும் நிதானமாக விளையாடிவந்த கோலி 25(24) ரன்கள் அடித்தபோது ஆவேஷ் கான் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் படிதர் அரைசதம் விளாச, தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 9(10) ரன்களிலும், லோம்ரார் 14(9) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இந்நிலையில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்த லக்னோ பந்துவீச்சாளர்களால், படிதரை சமாளிக்க முடியவில்லை. இதனால் படிதர் 49 பந்துகளில் சதம் விளாசினார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய படிதர் 12 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 112(54) ரன்களுடனும்,அவருக்கு உறுதுணையாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 37(23) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.இதனால் பெங்களூர் அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் 6(5) ரன்களில் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மனன்வோரா 19(11) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல்-தீபக் ஹூடா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அசத்தலாக விளையாடிய ராகுல் அரைசதம் அடிக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் 1 பவுண்டரி,4 சிக்ஸர் உட்பட 45(26) ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டோயின்ஸும் 9(9) ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால்,கடைசி இரண்டு ஓவருக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் 19-வது ஓவரை வீசிய ஹேசில்வுட் 4-வது பந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரி,5 சிக்ஸர் உட்பட 79(58) ரன்கள் எடுத்த ராகுலை வெளியேற்ற, அடுத்த பந்திலேயே க்ருணல் பாண்டியாவை டக் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியில் லக்னோ அணி வெற்றிபெற கடைசி ஓவருக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து, 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்குள் நுழைந்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூர் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது."

Leave a comment

Your email address will not be published.


*