ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-0024

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில்   ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங்செய்ய களமிறங்கிய  ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் ஜெய்ஸ்வால் 4(6) ரன்களுடன் டேவிட் வில்லி வீசிய 2வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 37(29) ரன்கள் எடுத்தபோது ஹர்ஷல் படேல் வீசிய 9வது ஓவரில் கோஹ்லியாடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8(8) ரன்களுடன் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஹெட்மெயரும் மறுமுனையில் தூண்போன்று நிலைத்துநின்ற பட்லரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர்.அதிலும் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் எடுத்ததால் ,ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 170 ரன்களை குவித்தது. இதில் ஜோஸ் பட்லர் 6 சிக்ஸர் விளாசி 70(47) ரன்களுடனும், 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய ஹெட்மெயர் 42(31) ரன்களுடனும் ஆடட்மிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர்.

இதனையடுத்து 171 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஃபாப் டூப்ளசிஸ் – அனுஜ் ராவத் ஜோடியில் யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் டூப்ளசிஸ் 29 ரன்களுடனும், நவ்தீப் பந்துவீச்சில் அனுஜ் ராவத் 26 ரன்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர்.

இதனையடுத்து களமிறங்கிய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி 5(6) ரன்களுக்கு எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாக, அடுத்த பந்திலேயே டேவிட் வில்லி டக்-அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து 5வது வீரராக களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் 5(10) ரன்களுக்கு டிரெண்ட் போல்ட்  பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 5 விக்கெட்களை இழந்து ஆர்சிபி அணி 87 ரன்களுக்கு தடுமாறியது.

இந்நிலையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் – சபாஷ் அகமது ஜோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடிகாட்டினர். இதில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 45(26) ரன்களுக்கு சபாஷ் அகமது அவுட்டாக, ஆட்டத்தின் முழு பொறுப்பையும் கையில்எடுத்த தினேஷ் கார்த்திக்  7பவுண்டரி, 1சிக்ஸர் உட்பட  44(23) ரன்களுடனும், 20 ஓவரில் ஸ்ட்ரைக்கிற்கு வந்து சிக்ஸரை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்திய ஹர்ஷல் பட்டேல் 9(4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதனால் 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி."

Leave a comment

Your email address will not be published.


*