ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் டைட்டனஸ் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-100110

அகமதாபாத்: இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான  யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடியில் சிறப்பாக விளையாடி 1 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய ஜெய்ஸ்வால் 22(16) ரன்கள் அடித்தபோது யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட முற்பட்டு 14(11) ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவிடம் வீழ்ந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 2(10) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகள் விளாசிய பட்லர் 39(35) ரன்கள் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 12 ஓவரில் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் அதன்பிறகு களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் 11(12), ரவிச்சந்திரன் அஷ்வின் 6(9) ,ரியான் பராக் 15(15), ட்ரெண்ட் போல்ட் 11(7), ஒபெத் மெக்காய் 8(5) என அடுத்தடுத்து வந்த வீரர்கள் குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவரக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து எளிய இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹா 5(7) ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சிலும் ,அடுத்துவந்த மேத்யூவ் வேட் 8(10) ரன்களுக்கு ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில்-ஹர்திக் பாண்டியா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் 3 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய ஹர்திக் பாண்டியா 34(30) ரன்கள் எடுத்தபோது யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

ஆனால் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் சுப்மன கில்லுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதில் 3 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய சுப்மன் கில் 45(43) ரன்களுடனும், 3 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய மில்லர் 32(19) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதனால் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் டைட்டனஸ் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது."

Leave a comment

Your email address will not be published.


*