ஐபிஎல் 2022: ராகுல் திவேத்தியா மற்றும் ரஷித் கானின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-00101

மும்பை: ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான கேப்டன் வில்லியம்சன் 5(8) ரன்களுடனும், அடுத்து வந்த ராகுல் திரிபாதி 16(10) ரன்களுடனும் முகமது ஷமி பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா-ஐடன் மார்க்ரம் ஜோடி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர். இதில் தூண் போன்று நிலைத்துநின்று விளையாடிய அபிஷேக் 6 பவுண்டரி,3 சிக்ஸர் உட்பட 65(42) ரன்களுடன் அல்ஸாரி பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூரன் 3(5) ரன்களுடன் முகமது ஷமி பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

அதேபோல மறுமுனையில் அபிஷேக்கிற்கு உறுதுணையாக விளையாடிய மார்க்ரம் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 56(40) ரன்களுடன் யாஷ் தயால் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 3(4) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இறுதியில் அணியை காப்பாற்ற களமிறங்கிய ஷஷாங் சிங்-மார்கோ ஜான்சென் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிலும் குறிப்பாக இதுவரை ஐபிஎல்-ல் பேட்டிங்கே செய்யாத ஷஷாங் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

இதனால் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா-சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 69 ரன்களை சேர்த்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் சுப்மன் கில் 22(24) ரன்களுடனும், அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 10(6) ரன்களுடனும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.  ஆனால் மறுமுனையில் 28 பந்துகளில் அரைசதம் கடந்த சஹா, தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும 11 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 68(38) ரன்கள் எடுத்தபோது உம்ரான் மாலிக் வீசிய யார்க்கர் பாலுக்கு விக்கெட் இழக்க,அடுத்துவந்த டேவிட் மில்லர் 17(19) ரன்களிலும்,அபினவ் மனோகர் ஸ்டம்ப் அவுட்டாகியும் யார்க்கருக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதன்மூலம் உம்ரான் மாலிக்கிடமே 5 விக்கெட்களை இழந்த குஜராத் அணி நிலைதடுமாறி நின்றது. இந்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் திவேத்தியா- ரஷித் கான் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.குறிப்பாக கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஷித் கான் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இதில் ராகுல் திவேத்தியா 40(21) ரன்களுடனும், ரஷித் கான் 31(11) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: ராகுல் திவேத்தியா மற்றும் ரஷித் கானின் அபார ஆட்டத்தால் குஜராத் அணி மீண்டும் முதலிடத்திற்கு சென்றது."

Leave a comment

Your email address will not be published.


*