ஐபிஎல் 2022: யுஸ்வேந்திர சாஹலின் அசத்தலான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-0065

மும்பை: ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனையடுத்து பேட்டிங்செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தேவ்தத் படிக்கல் -ஜோஸ் பட்லர் ஜோடியில்

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 24(18)ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ,பட்லருடன் இணைந்து அதிகமான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். ஆனால் 3 பவுண்டரி,2 சிக்சர் விளாசி 38(19) ரன்கள் எடுத்தபோது ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபக்கம் வழக்கம்போல் எதிரணியை திணறடித்து அதிரடியாக விளையாடிய பட்லர் 59 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 103(61) ரன்கள் எடுத்தபோது கம்மின்ஸின் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பராக் 5(3) மற்றும் கருண் நாயர் 3(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. இதில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்த ஹெட்மயர் 26(13) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரான சுனில் நரைன் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி அதிர்ச்சயை ஏற்படுத்தினார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்ச்-கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.

இந்நிலையில் தனது அபார ஆட்டத்தால் அரைசதம் விளாசிய ஃபிஞ்ச் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 58(28) ரன்களுடன் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழக்க , அடுத்துவந்த நிதிஷ் ராணா 18(11) ரன்களுடனும், ஆண்ட்ரே ரஸல் டக் அவுட்டாகியும் ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 85(51) ரன்கள் எடுத்திருந்தபோது யுஸ்வேந்திர சாஹல் வீசிய 17ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, சாஹலின் ஓவரிலேயே அடுத்தடுத்துவந்த வெங்கடேஷ் ஐயர் 6(7) ரன்களுடனும், பாட்  கம்மின்ஸ் மற்றும் ஷிவம் மாவி ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகியும் வெளியேறினர். 

இதனால் கொல்கத்தா அணி தோற்றுவிடும் என கருதப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய உமேஷ் யாதவ் சிறப்பாக விளையாடி 18ஆவது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இறுதியில் ஒபேத் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் ஷெல்டன் ஜாக்சன் 8(8)ரன்களுக்கு ஆட்டமிழக்க, உமேஷ் யாதவும் 21(9)ரன்களுக்கு நடையைக்கட்டினார்.

இதனால் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்ததால், ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: யுஸ்வேந்திர சாஹலின் அசத்தலான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*