ஐபிஎல் 2022 மெகா ஏலம்: சேதேஷ்வர் புஜாரா, எஸ் ஸ்ரீசாந்த் உட்பட 590 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ள

நிலையில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.ஆனால் அவர்களில் இந்திய பேட்டர் சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட 590 வீரர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் செவ்வாய்க்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் புஜாரா மற்றும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரீசாந்த் 50 லட்ச ரூபாய் அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளனர். ஏலத்தில் பதிவு செய்த 590 வீரர்களில், 228 சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் ,355 உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற வீரர்கள் மற்றும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் உட்பட 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ஆர் அஷ்வின், முகமது ஷமி, இஷான் கிஷான், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ,ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற திறமையான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சேவையைப் பெறுவதற்கான கடுமையான போராட்டம் நடைபெறவுள்ளது.

 இந்நிலையில் அஷ்வின், வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் பவுல்ட், பாட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர்கள் குயின் டி காக், டுபிளசிஸ் , ஸ்ரேயாஸ் ஐயர், ரபாடா, டேவிட் வார்னர், ஷிகர் திவான் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தங்களின் அடிப்படை விலையை 2 கோடியாக நிர்ணயத்துள்ளனர்.

இதையடுத்து ஆல் ரவுண்டரான  ஷகிபுல் ஹசன் மற்றும் சிஎஸ்கே வீரர் பிராவோ தங்களது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளனர். தொடர்ந்து இலங்கை வீரர் ஹசரங்கா ஒரு கோடி ரூபாயையும், மேற்கிந்திய தீவுகள் ஹோல்டர் 1.5 ரூபாயையும் தங்களது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர்.

இதைதொடர்ந்து இந்த மெகா ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் நுழைந்துள்ளார். அவர் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயத்துள்ளார்.

மேலும் இம்முறை ரூ.2 கோடியே அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 கோடி பட்டியலில் 48 வீரர்களும் ,1.5 கோடி பட்டியலில் 20 வீரர்களும், 1 கோடி பட்டியலில் 34 வீரர்களும் இந்த அடைப்புக்குறிக்குள் தங்களை இடம்பிடிக்க தேர்வு செய்துள்ளனர்.