மும்பை: ஐபிஎல் தொடரின் 65-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா 9(10) ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் த்ரிப்பாட்டி-ப்ரியம் கார்க் ஜோடி அதிரடியாக விளையாடி பவர்பிளேவில் 57 ரன்களை குவித்தனர். இதில் ப்ரியம் கார்க் 2 சிக்சர்,4 பவுண்டரி உட்பட 42(25) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரமன்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாட, மறுமுனையில் த்ரிப்பாட்டி வேகத்தை அதிகரித்து 32 பந்தில் அரைசதம் விளாசினார். இந்நிலையில் பூரன் 38(22) ரன்களில் ரிலே மெரிடித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ரமன்தீப் சிங் வீசிய 18ஆவது ஓவரின் 2-வது பந்தில் 9 பவுண்டரி,3 சிக்ஸர் விளாசிய த்ரிப்பாட்டி 76(44) ரன்களுடனும், 4-வது பந்தில் ஐடன் மார்க்கரம் 2(4) ரன்களுடனும் அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் ஆட்டமே மாறியது. ஏனெனில் அதன்பிறகு வந்த வாஷிங்டன் சுந்தர் 9(7), வில்லியம்சன் 8(7) ஆகியோர் சோபிக்க தவறியதால், ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா-இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி 50 ரன்களை குவித்தனர். இந்நிலையில் ரோகித் ஷர்மா 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 48(36) ரன்கள் எடுத்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் உம்ரன் மாலிக் பந்துவீச்சில் 5 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய இஷான் கிஷன் 43(34) ரன்களில் நடையைக் கட்டினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டேனியல் சாம்ஸ் 15(11) மற்றும் திலக் வர்மா 8(9) ஆகியோர் உம்ரன் மாலிக் பந்துவீச்சின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். இந்நிலையில் களமிறங்கிய டிம் டேவிட் பவுண்டரி மழை பொழிந்தார். இருப்பினும் நடராஜன் வீசிய 18வது ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 46(18) ரன்களுடன் அதே ஓவரில் ரன் அவுட் ஆனார்.
ஆனாலும் மும்பை அணி வெற்றிபெற கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில் புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த மும்பை அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டமுடியாமல் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி த்ரில் வெற்றிபெற்றது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: மும்பை அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது."