ஐபிஎல் 2022: மில்லர்-ஹர்திக் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்.

www.indcricketnews.com-indian-cricket-news-10082

மும்பை: ஐபிஎல் 15-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3(8) ரன்னில்  ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன்-ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பாக விளையாடினர். இதில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 47(26) ரன்களுடன் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் 28(20) ரன்கள் அடித்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

ஆனால் மறுமுனையில் நின்று நிதானமாக விளையாடிய ஜோஸ் பட்லர் 16-வது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை பதிவுசெய்தார்.  இந்நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்களான ஷிம்ரான் ஹெட்மயர் 4(7) ,ரியான் பராக் 4(3) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், இறுதியில் ரன் அவுட்டான பட்லர் கடைசி பந்துவரை அபாரமாக ஆடி 12 பவுண்டரி, 2 சிக்ஸர் என 89(56) ரன்கள் குவித்து போட்டியை முடித்து கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்த 188 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹா ரன் ஏதுமின்றி போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்யூ வேட்-சுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் 5 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசி 35(21) ரன்கள் எடுத்த சுப்மன் கில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து  மேத்யூ வேட்டும் 6 பவுண்டரி உட்பட 35(30) ரன்களுடன் ஒபிட் மெக்கே பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் பொறுப்பை உணர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா-டேவிட் மில்லர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின்  ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மில்லர் தனது 12-வது அரைசதத்தை பதிவுசெய்தார்.

இருப்பினும் குஜராத் அணி வெற்றிபெற கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு விளாசிய மில்லர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இதனால் 19.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மில்லர் 3 பவுண்டரி,5 சிக்ஸர் உட்பட 68(38) ரன்களும்,ஹர்திக் பாண்டியா 5 பவுண்டரி உட்பட 40(27) ரன்களும் விளாசினார். மேலும் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி, வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: மில்லர்-ஹர்திக் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்."

Leave a comment

Your email address will not be published.


*