மும்பை: ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஓபனர்களான வெங்கடேஷ் ஐயர்-அஜிங்கியா ரஹானே ஜோடி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி,4 சிக்ஸர் விளாசிய வெங்கடேஷ் 43(24) ரன்களுடனும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரஹானே 25(24) ரன்களுடனும் ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6(8) ரன்கள் எடுத்தபோது முருகன் அஷ்வினிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் தூண் போன்று நின்று அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் பும்ரா வீசிய 15ஆவது ஓவரில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராணா 3 பவுண்டரி,4 சிக்ஸர் உட்பட 43(26) ரன்களுடனும், ஆண்ட்ரே ரஸல் 9(5) ரன்களுடனும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.
இதனைத்தொடர்ந்து பும்ரா வீசிய 18ஆவது ஓவரில் சுனில் நரைன் 0(1),பாட் கம்மின்ஸ் 0(2) மற்றும் ஷெல்டான் ஜாக்சன் 5(7) ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ரிங்கு சிங் 23(19) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இதனால் 20 ஓவருக்கு 9 விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணி 165 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் டீம் சௌதி வீசிய முதல் ஓவருக்கு தொடக்க வீரரான ரோகித் ஷர்மா வெறும் 2(6) ரன்களுக்கு வெளியேற, அவரைத்தொடர்ந்து வந்த திலக் வர்மா 6(5) ரன்களுடன் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராமந்தீப் சிங் 12(16) ரன்களுடன் ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர்வந்த டிம் டேவிட் 12(49) ரன்களுடன் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் 5 பவுண்டரி,1 சிக்ஸர் அடித்த இஷான் கிஷன் நிதானமாக விளையாடி அரைசதம் விளாசினார். ஆனால் பாட் கம்மின்ஸ் வீசிய 15ஆவது ஓவரில் இஷானும் 51(43) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மேலும் அவரைத்தொடர்ந்து வந்த டேனியல் சாம்ஸ் 1(2) மற்றும் முருகன் அஷ்வின் 0(2) ஆகியோர் அதே ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களமிறங்கிய குமார் கார்த்திகேயா 3(5) ரன்களுடனும், பொல்லார்ட் 15(16) ரன்களுடனும் ரன் அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இதனால் 17.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 113 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: பாட் கம்மின்ஸ- ஆண்ட்ரே ரஸல் அசத்தலான பந்துவீச்சால் மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி."