ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

www.indcricketnews.com-indian-cricket-news-10053

மும்பை: ஐபிஎல் தொடரின் 64ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று  டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.ஏனெனில் லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரை  எதிர்கொண்ட அதிரடி ஓபனரான டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி நடையைக்கட்டினார்.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த சர்பரஸ் கான்-மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.ஆனால் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 5 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய சர்பரஸ் கான் 32(16) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய லலித் யாதவ் பெரிய ஸ்கோர் அடிக்க முற்பட்டு 24(21) ரன்களுடன் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸ் அடித்து 7(3) ரன்களுடனும், அவரையடுத்து வந்த ரோமேன் போவெல் 2(6) ரன்களுடனும் லிவிங்ஸ்டன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருமுனையில் தொடர் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்துநின்று விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும் ரபாடா வீசிய 19ஆவது ஓவரில் 4 பவுண்டரி,3 சிக்ஸர் என அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் 63(48) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோ  அதிரடியாக விளையாட முயன்று 4 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசி 28(15) ரன்களுக்கு நார்ட்ஜே பந்துவீச்சில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜபக்ஷே 4(5) ரன்களுடனும், மறுமுனையில் நிதானமாக விளையாடி 3 பவுண்டரி அடித்த ஷிகர் தவன் 19(16) ரன்களுடனும் ஷர்துல் தாகூர் வீசிய ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  மயங்க் அகர்வால் 0(1), லிவிங்ஸ்டன் 3(5) ஹர்ப்ரீத் ப்ரார் 1(2), ரிஷி தவான் 4(13) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க,பஞ்சாப் அணி 82 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும்,மறுமுனையில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.அவருடன் இணைந்து கடைசிநேரத்தில் ராகுல் சாஹர் அதிரடியாக விளையாட போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. இறுதியில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் 3 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய ஜிதேஷ் 44(34) ரன்களில் வெளியேற, ராகுல் சாஹர் 25(24) ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது."

Leave a comment

Your email address will not be published.


*