ஐபிஎல் 2022: நிதிஷ் ராணா – ரிங்கு சிங் அபார ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-10008

மும்பை: ஐபிஎல் 15வது சீசனின் 47ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல் 2(5) ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர்-சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்த சீசனில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் பட்லர் இப்போட்டியில் தட்டுத்தடுமாறி 22(25) ரன்கள் மட்டுமே அடித்து டிம் சௌதி பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, அடுத்துவந்த கருண் நாயர் 13(13) ரன்களுடன் அனுகுல் ராய் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடிக்க, அவருக்கு உறுதுணையாக களமிறங்கிய ரியான் பராக் 19(12) ரன்களில் டிம் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 54(49) ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதில் ஹெட்மயர் ஒரு பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 27(13) ரன்களுடனும்,அஷ்வின் 6(5) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க , 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழந்தது.

இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்கமே ஏமாற்றமாக இருந்தது. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபின்ச் 4(7) ரன்களுடன் குல்தீப் சென் பந்துவீச்சிலும், மறுமுனையில் பிரதீப் கிருஷ்ணா வீசிய பந்தில் இந்திரஜித் 15(16) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 32 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய கொல்கத்தா அணியை காப்பாற்ற பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஷ் ஐயர்-நிதிஷ் ராணா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 3 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 34(32) ரன்கள் எடுத்தபோது ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால்,ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நிதிஷ் ராணாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இறுதியில் 3 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய நித்ஷ் ராணா 48(37) ரன்களுடனும், 6 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் 42(23) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதன்மூலம் 19.1 ஓவருக்கு 3 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி 158 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: நிதிஷ் ராணா – ரிங்கு சிங் அபார ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது."

Leave a comment

Your email address will not be published.


*