ஐபிஎல் 2022: நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது சென்னை அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10044

மும்பை: ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தொடக்க வீரரான டெவோன் கான்வே டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார் .

ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போயிருக்கும் என்பதால், கான்வே எல்.பி.டபள்யூ அவுட்டை எதிர்த்து டிஆர்எஸ் கேட்டார். அந்த மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டு டி.ஆர்.எஸ் எடுக்கமுடியாது என்பதால் நடுவர் அவுட் என அறிவித்தார். இதனால் கான்வே அதிருப்தியுடன் நடையைக்கட்டினார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சிஎஸ்கேவுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதே ஓவரின் 4வது பந்தில் மொயீன் அலி டக் அவுட்டாக,பும்ரா வீசிய 2ஆவது ஓவரில் ராபின் உத்தப்பா 1(6) ரன்னுடனும், டேனியல் சாம்ஸ் வீசிய 4ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 7(6) ரன்களுடனும், ரிலே மெரிடித் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரில் அம்பத்தி ராயுடு 10(14) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பவர்ப்ளேயில் 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது.

அதன்பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே 10(9), பிராவோ 12(15), சிமர்ஜீத் சிங் 2(3) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க , மறுமுனையில் நிலைத்துநின்று இறுதிவரை களத்தில் இருந்த தோனியும் ஆட்டம் கைமீறி சென்றதை உணர்ந்து அடித்து ஆட முயற்சி செய்யவில்லை. இதனால் 16 ஓவர் முடிவில் 97 ரன்களுக்கு சுருண்டது சிஎஸ்கே அணி.

இதில் அதிகபட்சமாக தோனி 4 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 36(33)ரன்களை எடுத்தார். இதனையடுத்து எளிய இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கும் பேட்டிங் சரியாக அமையவில்லை. ஏனெனில் இஷான் கிஷான் 6(5), கேப்டன் ரோகித் சர்மா 18(14) ,டேனியல் சாம்ஸ் 1(6) ,ஸ்டப்ஸ் 0(2) என பவர்ப்ளே முடிவதற்குள் மும்பை அணி 33 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா- சோகீன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். இந்நிலையில் மொயீன் அலி வீசிய 13ஆவது ஓவரில் சோகீன் 18(23) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்தவந்த டிம் டேவிட் திலக் வர்மாவுடன் இணைந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இதில் 4 பவுண்டரி விளாசிய திலக் வர்மா 34(32) ரன்களுடனும், 2 சிக்ஸர் அடித்த டிம் டேவிட் 16(7) ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனால் 14.5 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து மும்பை அணி 103 ரன்களை எடுத்து,5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் சென்னை அணி வெளியேறியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது சென்னை அணி."

Leave a comment

Your email address will not be published.


*