ஐபிஎல் 2022: டேவிட் வார்னரின் அரைசதம் பஞ்சாப் கிங்க்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிபெற வழிகாட்டியது.

www.indcricketnews.com-indian-cricket-news-0075

மும்பை: ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானித்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 9(10) ரன்களுடன் லலித் யாதவ் பந்துவீச்சிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாட முற்பட்டு  4 பவுண்டரி விளாசிய மயங்க் அகர்வால் 24(15) ரன்களுடன் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்துவீச்சிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 9(8) ரன்களில் கலில் அகமது பந்துவீச்சிலும், அடுத்தவந்த அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் 2(3) ரன்களில் அக்ஸர் படேல் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை  பறிகொடுத்து பேரதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனால் பஞ்சாப் அணி 6.4 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் அணியை காப்பாற்ற களமிறங்கிய ஜித்தேஷ் ஷர்மா -ஷாரூக் கான் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் தனியொரு ஆளாக போராடி 5 பவுண்டரி விளாசிய ஜித்தேஷ் ஷர்மா 32(23) ரன்கள் எடுத்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய ரபாடா 2(6) ரன்களுடனும், எல்லீஸ் ரன் ஏதும் எடுக்காமலும் குல்தீப் யாதவின் கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

அவர்களைத்தொடர்ந்து மறுமுனையில் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷாருக் கான் வெறும் 12(20) ரன்களோடு கலீல் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் இறுதியாக களமிறங்கிய ராகுல் சஹார் 12(12) ரன்கள் எடுத்தபோது லலித் யாதவ் பந்துவீச்சிலும், அர்ஷ்தீப் சிங் 9(17) ரன்களுடன் ரன் அவுட்டாகியும் வெளியேறியதால், 20 ஓவருக்கு  பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து எளிய இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா – டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை குவித்தனர். இதில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசிய பிரித்வி ஷா 41(20) ரன்கள் எடுத்தபோது ராகுல் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த டேவிட் வார்னர் 10 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 60(30) ரன்களுடனும், தொடர்ந்துவந்த ஷாருக்கான் 12(13) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனால் டெல்லி அணி 10.3 ஓவருக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் டெல்லி அணிக்கு 57 பந்துகள் மீதமிருந்த நிலையில், 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: டேவிட் வார்னரின் அரைசதம் பஞ்சாப் கிங்க்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிபெற வழிகாட்டியது."

Leave a comment

Your email address will not be published.


*