ஐபிஎல் 2022: சென்னை அணியை வீழ்த்திய பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-10016

மும்பை: ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி-ஃபாஃப் டூ பிளெஸிஸ் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் 4 பவுண்டரி,1 சிக்ஸர் அடித்த டூ பிளெஸிஸ் 38(22) ரன்களுடன் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் வெறும் 3(3) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சற்று மந்தமாக விளையாடிய கோலி 3 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 30(33) ரன்கள் எடுத்தபோது மொயின் அலி பந்துவீச்சில் ஆடட்மிழக்க, அதன்பின்னர் மிடில் ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைத்த ராஜத் படித்தர்-மஹிபால் லோம்ரர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

ஆனால் ப்ரிட்டோரியஸ் பந்துவீச்சில் 21(25) ரன்களுடன் படித்தர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.மறுமுனையில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய லோம்ரர் 42(27) ரன்கள் எடுத்தபோது தீக்ஷனா வீசிய 19ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹசரங்கா 0(1),ஷாபஸ் அகமது 1(2) ஆகிய இருவரும் அதே ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஆனால் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு தினேஷ் கார்த்திக் 26(17) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்-டேவன் கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இருப்பினும் 3 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய ருதுராஜ் 28(23) ரன்கள் எடுத்தபோது ஷாபஷ் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா 1(3) மற்றும் அம்பத்தி ராயுடு 10(8) ஆகியோர் சொற்ப ரன்களுடன் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே அரைசதம் கடக்க, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மொயின் அலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் ஹசரங்கா பந்துவீச்சால் 6 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய கான்வே 56(37) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜடேஜா 3(5)  ரன்களுடன் ஹர்ஷர் படேல் பந்துவீச்சில் ஏமாற்றமளித்தார்.

இறுதியில் 2 பவுண்டரி,2 சிக்ஸர் என சிறப்பாக விளையாடிய மொயின் அலி 34(27) ரன்களுடன் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் தோனி 3(5) மற்றும் ப்ரிட்டோரியஸ் 13(8) இருவரும் ஹர்ஷல் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து,13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: சென்னை அணியை வீழ்த்திய பெங்களூர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*