ஐபிஎல் 2022: கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்த ஐதராபாத் அணி

www.indcricketnews.com-indian-cricket-news-0041

மும்பை: ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 7(9) ரன்களுடன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சிலும், அடுத்துவந்த சாய் சுதர்சன் 11(9) ரன்களுடன் டி. நடராஜன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் மறுபுறம் விளையாடிய மேத்யூ வேட் சொற்ப ரன்களான 19(19) ரன்களுடன் உம்ரான் மாலிக் பந்துவீச்சிலும், அடுத்ததாக களமிறங்கி மந்தமாக விளையாடிய டேவிட் மில்லர் 12(15) ரன்களுடன் மார்கோ யான்சன் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த குஜராத் அணி 13.3 ஓவரில் 104 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது.

இதனையடுத்து அணியை காப்பாற்ற களமிறங்கிய ஹர்திக் பாண்டியா-அபினவ் மனோகர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இதில் பொறுப்பான அரைசதம்  விளாசி 4 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 50(24) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். ஆனால் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசிய அபினவ் மனோகர் 35(21) ரன்களுடன் புவனேஷ்வர் குமார் வீசிய 18.5வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ராகுல் தெவாட்டியா 6(4) ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். இதனால் 20 ஓவருக்கு 7 விக்கெட் இழந்த குஜராத் அணி 162 ரன்கள் அடித்தது.

இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கி சிறப்பான துவக்கத்தை கொடுத்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடியில் 6 பவுண்டரி விளாசிய அபிஷேக் ஷர்மா  42(32) ரன்களுடன் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர் விளாசிய கேன் வில்லியம்சன் 57(46) ரன்கள் எடுத்தபோது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கி 1 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசிய ராகுல் திரிபாதி காயம் காரணமாக 17(11) ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் இறுதியாக களமிறங்கி 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அதிரடியாக ஆட்டத்தை விளையாடிய நிக்கோலஸ் பூரன் 34(18) ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 12(8) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால்  19.1 ஓவருக்கு 2 விக்கெட் மட்டுமே இழந்த ஐதராபாத் அணி 168 ரன்களை குவித்து  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் குஜராத் அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்த ஐதராபாத் அணி"

Leave a comment

Your email address will not be published.


*