மும்பை: ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று பிராபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான மன்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்தவந்த மிட்செல் மார்ஷ் 10(7) ரன்களில் சீன் அபோட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இந்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பந்த்-டேவிட் வார்னர் ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் அரைசதம் விளாச, மறுமுனையில் ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் கேப்டன் ரிஷப் பந்த் ஹாட்ரிக் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே 26(16) ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர் வார்னருடன் இணைந்த ரோவ்மன் பாவெல் சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் டெல்லி அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 207 ரன்கள் குவித்தது. இதில் 12 பவுண்டரி,3 சிக்ஸர் விளாசிய வார்னர் 92(58) ரன்களுடனும், 3 பவுண்டரி,6 சிக்ஸர் விளாசய பாவெல் 67(35) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா 7(6) ரன்களுடன் கலீல் அகமது பந்துவீச்சிலும், மறுமுனையில் கேன் வில்லியம்சன் 4(11) ரன்களுடன் அன்ரிச் நோர்க்கியா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ராகுல் திரிபாதி 2 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 22(18) ரன்களுடன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த நிக்கோலஸ் பூரன்-எய்டன் மார்க்கரம் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 4 பவுண்டரி,3 சிக்ஸர் உட்பட 42(25) ரன்களில் கலீல் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தனியொரு நபராக பூரன் சிக்ஸர், பவுண்டரி என அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய ஷாஷாங் சிங் 10(6), சீன் அபோட் 5(5),கார்த்திக் தியாகி 7(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பிய நிலையில், மறுமுனையில் ஷர்தூல் தாகூர் வீசிய 18ஆவது ஓவரில் 2 பவுண்டரி,6 சிக்ஸர் உட்பட 62(34) ரன்களுடன் பூரன் விக்கெட் இழந்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்தது.
Be the first to comment on "ஐபிஎல் 2022: ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது."