ஐபிஎல் 2022: உலகின் சிறந்த பினிஷர் தோனியின் அசத்தலான பேட்டிங்கால் சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-0079

மும்பை: ஐபிஎல் தொடரின் 33 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணிகள் நேற்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான  ரோஹித் ஷர்மா- இஷான் கிஷன் ஆகிய இருவரும் முகேஷ் சௌத்ரி வீசிய முதல் ஓவரில் டக் அவுட்டாகி வெளியேற , 2ஆவது ஓவரில் அடுத்து வந்த டேவிட் ப்ரெவிஸ் 4(7) ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் மும்பை அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரனக்ளை குவித்தார். இருப்பினும் 3 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 32(21) ரன்களுடன்  சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹிருத்திக் ஷோகீன் 3 பவுண்டரி உட்பட 25(25) ரன்களுடனும், தொடர்ந்துவந்த டேனியல் சாம்ஸ் 5(3) ரன்களுடனும் பிராவோவின் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.

இதற்கிடையே அதிரடியாக விளையாட முற்பட்ட  பொல்லார்ட் 14(9) ரன்களுக்கு தீக்சணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய திலக் வர்மா 51(43) ரன்களுடனும், அடுத்துவந்த உனத்கட் 19(9) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தனர்.

இதனால் 20 ஓவருக்கு மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஆரம்பமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, 3ஆவது ஓவரில் அடுத்துவந்த மிட்செல் சாண்ட்னர் 2 பவுண்டரி உட்பட 11(9)ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ராபின் உத்தப்பா- அம்பத்தி ராயூடு ஜோடி சீரான வேகத்தில் ரன்களை குவித்ததால், சிஎஸ்கே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தப்பா 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 30(25) ரன்களுடன் உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் ஷிவம் தூபே 13(14) ரன்களுடனும், மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட  ராயூடு 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 40(35) ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜடேஜா 3(8)ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவருக்கு 18ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் உனத்கட் வீசிய முதல்பந்தில் பிரிட்டோரியஸ் 22(14)ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்த பந்துகளில் தோனி 1 சிக்ஸர்,2 பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 7ஆவது முறையாக தோல்வியை தழுவியது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: உலகின் சிறந்த பினிஷர் தோனியின் அசத்தலான பேட்டிங்கால் சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*