ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவு: முக்கிய வேகப்பந்துவீச்சாளர் திடீர் விலகல்

Chennai Super Kings Pacer Josh Hazlewood -Pulls Out Of IPL 2021
Chennai Super Kings Pacer Josh Hazleton -Pulls Out Of IPL 2021

2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனிலிருந்து சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய வீரருமான ஜோஷ் ஹேசல்வுட் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், டுவைன் பிராவோ, லுங்கி இங்கிடி, சாம் கரன், ஹேசல்வுட் ஆகியோர் உள்ளனர். இதில் சர்வதேச அளவில் அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக ஹேசல்வுட் இருந்த நிலையில் அவரின் விலகல் நிச்சயம் வேகப்பந்துவீச்சில் சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். இவருக்கு மாற்றாக எந்த வீரரையும் இன்னும் சிஎஸ்கே நிர்வாகம் எடுக்கவில்லை.
கிரிக்கெட்டிலிருந்து சிறிய இடைவெளி தேவை, கரோனா காலத்தில் தொடர்ந்து தனிமைப்படுத்தும் முகாமில் இருந்துவிட்டேன், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன் என்று ஜோஷ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் 3-வது ஆஸ்திரேலிய வீரர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஏற்கெனவே மிட்ஷெல் மார்ஷ் விலகியுள்ளார். ஆர்சிபி அணியிலிருந்து ஜோஷ் பிலிப் விலகியுள்ளார். சிஎஸ்கே அணியிலிருந்து தற்போது ஜோஷ் ஹேசல்வுட் விலகியுள்ளார்.

இதுகுறித்து ஹேசல்வுட் ஆஸி. இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த 10 ஆண்டுகளாக நான் பயோ-பபுள் சூழலில் இருந்து பல்வேறு விதங்களில் இருந்துவிட்டேன். ஆதலால், சிறிது காலத்துக்கு கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்து, இரு மாதங்கள் என் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன்.

குளிர்காலத்தில் எங்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் காத்திருக்கிறது. மே.இ.தீவுகள் நீண்ட பயணம் வருகிறார்கள், வங்கதேசம் அணியினர் வருகிறார்கள், அதன்பின் டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் இருக்கிறது. ஆதலால், அதற்கு நான் தயாராக வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்காகத் தொடர்ந்து இருப்பேன், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக எனக்கு இது நல்ல வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே ஜோஷ் பிலிப், மிட்ஷெல் மார்ஷ் இருவரும் விலகிய நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் விலகியுள்ளார். ஐபிஎல் தொடருக்காக 7 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தும் விதிகளை பிசிசிஐ அறிவித்திருப்பது பல வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்குக் கவலையை அதிகரித்து வருவதால், விலகியுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஏற்கெனவே ரூ.2 கோடிக்குத்தான் இந்த முறை ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்துள்ளது. குறைவான ஏலத்தொகையில் எடுத்ததால் ஸ்மித் அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் கடைசி நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் கூட ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் விலகவும் வாய்ப்புள்ளதாக ஆஸி. ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Be the first to comment on "ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவு: முக்கிய வேகப்பந்துவீச்சாளர் திடீர் விலகல்"

Leave a comment

Your email address will not be published.


*