ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக “சிஎஸ்கே அணியை ரொம்ப பிடிக்கும்” என வளர்ந்து வரும் நட்சத்திரம் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-023

நியூ டெல்லி: ஐபிஎல் 15வது சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்த்து லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ள நிலையில், பெங்களூருவில் வரும் 12,13 ஆகிய தேதிகளில் அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கப் பதிப்பிலிருந்து சிஎஸ்கே அணிக்கு இணையான பெயர் எம்எஸ் தோனி. வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி, இந்திய அணியை மூன்று முறை ஐசிசி கோப்பைகளுக்கு வழிநடத்தியுள்ளார். அதேபோல தோனியின் தலைமையின்கீழ், சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மற்ற அணிகளுடன் போட்டியில் போட்டியிட்டு அதிகபட்ச வெற்றி சதவீதத்தையும் சிஎஸ்கே அணி வெளிப்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து தோனியின் தலைமையின்கீழ் விளையாடும்போது பல வீரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதேபோல இந்த மெகா ஏலத்தில் பங்குபெறவுள்ள 26 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் அப்பட்டியலில் சேர விரும்புகிறார். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள தீபக், சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதில், “ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள 12,13 ஆகிய தேதிகளை எதிர்பார்த்து நான் காத்திருக்கவில்லை. வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளேன். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

மேலும் ஐபிஎலில் இந்த அணிக்காகத்தான் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இருப்பினும், எனக்கு மிகவும் பிடித்த அணி எது என்று கேட்டால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். தோனியின் தலைமைக்குக்கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை” எனத் தெரிவித்தார்.

மேலும் தோனி குறித்து பேசிய அவர், “நான் தோனியின் வெறித்தனமான ரசிகன். அவரது அணுகுமுறை, தலைமைபண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பலமுறை அவருடன் பேசியிருக்கிறேன். அப்போது எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து விளக்கமாக தெளிவாக கூறியிருக்கிறார். அவருடைய ஆலோசனை இன்றுவரை பயனுள்ளதாக இருக்கிறது” எனக் கூறினார்.

ஹூடா முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்த போது, தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் பணியாற்றினார். மேலும் கும்ப்ளேவிடமிருந்து உள்வாங்கிய விஷயங்களைப் பற்றி கூறுகையில், “1000 சர்வதேச விக்கெட்டுகளை பெற்றுள்ள அனில் கும்ப்ளேவிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு ஜாம்பவான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் மிகவும் முதிர்ச்சியடைந்தேன். என்னை மனதளவிலும், விளையாட்டிலும் மேம்படுத்தியவர். முதன்முதலாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினேன். எனது பங்கு என்ன என்பது குறித்து அவர் விளக்கிய விதம், எனக்கு தெளிவை ஏற்படுத்தியது,” இவ்வாறு ஹூடா தெரிவித்துள்ளார்.