ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி… விசில் போட்டு வரவேற்ற ரசிகர்கள்

சென்னை: ஐபிஎல் 2020 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை முதல் சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். இதற்கென சென்னை வந்த தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென ஐபிஎல் அணிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. மேலும் அணி வீரர்களுக்கான பயிற்சிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் நாளை முதலே பயிற்சியில் பங்கேற்பதற்காக தோனி இன்று சென்னை வந்துள்ளார்.

ஐபிஎல் சீசன் 2020 வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இந்த முறை கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் காணப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களின் பயிற்சிகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த தொடர்களை போலல்லாமல் அதிக நாட்கள் நடைபெறவுள்ளன.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அணி வீரர்கள் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களுடன் பயிற்சியில் பங்கேற்க உள்ளார்.

ஐபிஎல் சீசனுக்காக பயிற்சியில் பங்கேற்க இன்று சென்னை வந்த எம்.எஸ். தோனிக்கு சென்னை விமானநிலையத்தில் ரசிகர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் சென்னை வந்த நிகழ்வை ஒரு திருவிழாவாக சென்னை சூப்பர் கிங்ஸ் கொண்டாடியது. மேலும் அந்த நிகழ்வை விடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்னை வந்த தோனி தான் தங்கவுள்ள ஹோட்டல் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்த்தார். இதனிடையே அவரது வருகையை வீடியோவாக பதிவிட்டுள்ள சிஎஸ்கே டிவிட்டர் தளம், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை போன்ற சிலிர்ப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் விசில் அடிக்க துவங்குமாறும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தல தோனியின் தரிசனத்திற்காகவும் அவர் விளையாடும் போட்டிகளுக்காகவும் கடந்த 8 மாதங்களாக சர்வதேச அளவில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக பயிற்சியில் ஈடுபடும் வகையில் சென்னை வந்துள்ள ‘தல’யின் தரிசனம் என்றும் சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

Be the first to comment on "ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி… விசில் போட்டு வரவேற்ற ரசிகர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*