ஐசிசி பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி- 10-வது இடத்தில் மயங்க் அகர்வால்

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் சொதப்பியதால் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி.

ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்மித், விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஸ்மித் முதல் இடத்தை பிடித்தார்.

ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடருக்கு பின் தவறவிட்ட முதல் இடத்தை மீண்டும் பிடித்து அசத்தி இருக்கிறார். பும்ரா, ஷமி ஆகியோரும் தரவரிசையில் சரிந்துள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது, இரண்டாம் இடத்தில் இருந்த கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரன் வேட்டை நடத்தி முதல் இடத்தை பிடித்தார். அப்போதைக்கு டெஸ்ட் அணியில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை தக்க வைத்தார்.

பின் ஸ்டீவ் ஸ்மித் தடையில் இருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் சதம் மேல் சதமாக அடித்து மிரட்டிய ஸ்டீவ் ஸ்மித், மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். கோலி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.


பின் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரன் குவித்த கோலி முதல் இடத்தை மீண்டும் பிடித்தார். இருவரும் முதல் இடத்துக்கு கடும் போட்டி போட்டு வந்தனர். எனினும், கடந்த நான்கு மாதங்களாக கோலி முதல் இடத்தில் நீடித்து வந்தார்.

அதன்பின் வங்காளதேசம் அணிக்கெதிராக சதம் அடிக்க மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இதற்கிடையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்மித் 911 புள்ளிகளும், விராட் கோலி 906 புள்ளிகளும் பெற்றுள்ளனர். கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம் (800), டேவிட் வார்னர் (793) ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளனர்.

ஜோ ரூட் (764) 7-வது இடத்திலும், ரகானே (760) 8-வது இடத்திலும், புஜாரா (757) 9-வது இடத்திலும், மயங்க் அகர்வால் (727) 10-வது இடத்திலும் உள்ளனர்.

Be the first to comment on "ஐசிசி பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி- 10-வது இடத்தில் மயங்க் அகர்வால்"

Leave a comment

Your email address will not be published.


*