லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. மேலும் இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் 163(174) ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121(268) ரன்களும் குவித்தனர். இதன்மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 89(129) ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51(109) ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48(51) ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இந்திய அணி 280 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறும் என்று இலக்குடன் நேற்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் கோஹ்லி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 49(78) ரன்கள் எடுத்தபோது ஸ்காட் போலாண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே – கேஎஸ் பரத் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து வந்தனர். இந்நிலையில் 46(108) ரன்கள் எடுத்திருந்த ரஹானே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஷர்துல் தாக்கூர ரன்கள் ஏதுமின்றி நாதன் லையன் வீசிய அடுத்த ஓவரிலேயே வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவ் 1(12) ரன்னுடன் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 23(41) ரன்களை எடுத்திருந்த கேஎஸ் பரத்தும் நாதன் லையன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் . இறுதியில் 1(6) ரன் எடுத்திருந்த சிராஜும் நாதன் லையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், போலாண்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்காக நீண்டநாள் காத்திருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது."