மும்பை: இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை கைபற்றாத இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வாய்ப்பை கோட்டை விட்டு வெறும் கையுடன் நாடு திரும்பியது.
ஆனால், தோல்வியை விட, 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவிய விதமும், அதற்கு இந்திய அணி எடுத்த முடிவுகளும் தான், ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்ததுடன் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் போன்றவர்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ள சுனில் கவாஸ்கர், “42 ரன்களில் நாக் அவுட் செய்யப்பட்ட அணிகளில் நான் இருந்தேன். இதற்காக மாற்று அறைகளில் பரிதாபமாக இருந்தோம்.
நாங்களும் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானோம். எனவே, தற்போதைய நிலை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கூறிவிட முடியாது. என்ன நடந்தது, எப்படி அவுட் ஆனார்கள், ஏன் நன்றாகப் பந்து வீசவில்லை, ஏன் கேட்ச் பிடிக்கவில்லை, ப்ளேயிங் லெவன் தேர்வு சரியாக இருந்ததா, இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். குறிப்பாக நம்முடைய அணுகுமுறை சரியாக இருந்ததா? தேர்வு சரியாக நிகழ்ந்ததா? என்பது போன்ற காரணிகள் எல்லாம் வரவேண்டும்” இவ்வாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தியாளர்களிடம் கவாஸ்கர் தெரிவித்தார்.
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், இந்தியா இத்தொடரை விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “மேற்கிந்தியத் தீவுகள் உலகின் சிறந்த அணி அல்ல. எனவே இந்த அணிக்கு எதிராக எந்தவொரு போட்டியாக இருந்தாலும் இந்திய அணி 2-0, 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வெற்றிபெற்றுவிடும். ஆனால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் மோதும் நிலை ஏற்பட்டால், மீண்டும் இந்தியா தோல்வியடையும்.
ஏனெனில், பயிற்சியின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், வீரர்கள் தடுமாறும் விஷயத்தில் எந்தவொரு அலசலும் இல்லாமல், குறிப்பாக வீரர்களைப் பற்றிய சுயமதிப்பீடு முழுமையாக செய்யாமல், டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் கலந்துகொண்டு அதே தவறுகளைச் செய்தால், கோப்பையை எப்படி வெல்வீர்கள்? என்று சுனில் காவஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்குப் பிறகு ராகுல் டிராவிட்டை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்."