உலகக் கோப்பை டி20.. 9 இந்திய நகரங்கள்.. பரபரக்கும் ‘SGM’ மீட்டிங்

இந்தியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடர் குறித்த முக்கிய ஆலோசனைக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் தினம் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட, பலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதற்கிடையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில், கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், இதர கொல்கத்தா வீரர்கள் என்று அடுத்தடுத்து கோவிட் ஆட்களை பிடிக்க, பயந்து போன பிசிசிஐ, மறு தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது.

மீண்டும் ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் நச்சரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், உலகக் கோப்பை டி20 தொடர் இப்போது ‘உள்ளேன் ஐயா’ என்கிறது. ஆம், உலகக் கோப்பை டி20 தொடர், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்கவிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய தொடர் இது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2021ல் இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி ஒத்திவைத்தது. ஆனால், இந்தியாவில் நிலைமையோ இப்போது தலைகீழ்.

உலகக் கோப்பை முடிவு செய்ய, வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த நிலையில், அதற்கு முன்பாகவே.. அதாவது மே 29ம் தேதி, SGM எனப்படும் ‘சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை’ பிசிசிஐ கூட்டுகிறது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா சூழல் குறித்தும், உலகக் கோப்பையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மே.29 மீட்டிங் அன்று ஆலோசிக்கப்படுகிறது. இந்த தொடருக்கு என பிசிசிஐ 9 இடங்களை தேர்வு செய்துள்ளது. அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புது டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, தரம்சாலா மற்றும் லக்னோ ஆகிய இடங்கள் இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அக்டோபர் – நவம்பரில் இந்தியாவின் கொரோனால் நிலை குறித்து இப்போதே யூகிப்பது சாத்தியமில்லாத ஒன்று. தொடர் நெருங்கும் சமயத்தில் தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், அதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. இதுகுறித்து எஸ்ஜிஎம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது வரை பி.சி.சி.ஐ.யின் முடிவுக்கு நாம் அனைவரும் மே 29 வரை காத்திருப்போம்.

Be the first to comment on "உலகக் கோப்பை டி20.. 9 இந்திய நகரங்கள்.. பரபரக்கும் ‘SGM’ மீட்டிங்"

Leave a comment

Your email address will not be published.


*