இளம் நட்சத்திர பேட்டருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு தர வேண்டும்- விரேந்திர சேவாக்.

www.indcricketnews.com-indian-cricket-news-100321

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெற்றிபெற்ற இந்தியா, வெற்றியுடன் தொடரை துவங்கியது. மேலும் லீக் சுற்றில் தென்னாப்பரிக்காவுக்கு எதிராக மட்டும் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று குரூப் 2 பிரிவிலிருந்து 8 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஆனால் அரையிறுதி போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடுமையாக திணறியது. இப்போட்டியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மூலம் மட்டுமே இந்திய அணி 168 ரன்கள் குவித்தது. ஆனால் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை விட இந்திய அணி பந்துவீச்சில் மிகமோசமாக செயல்பட்டது.

குறிப்பாக இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காத இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினர். உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது அதிருப்திகளை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணி குறித்து பல்வேறு விஷயங்களை பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இளம் வீரரான பிரித்வி ஷாவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் பேசுகையில், “2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ப்ரித்வி ஷா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவ்வப்போது ஃபிட்னெஸ் பிரச்னையால் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் அப்படியே ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷாவிற்கு சமீபத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டி விளையாடியுள்ள பிரித்வி ஷா அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்திய அணியில் நிலவி வரும் டாப் ஆர்டர் பிரச்சனை சரிசெய்ய, உள்ளூர் தொடர்களில் 152 ஸ்டிரைக் ரேட்டில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ப்ரித்வி ஷாவிற்கு இந்திய அணியில் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்கவேண்டும். குறிப்பாக டி20 போட்டிகளுக்கு பிரித்வி ஷா சரியான நபர், ரிசர்வ் வீரராகவாவது அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இளம் நட்சத்திர பேட்டருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு தர வேண்டும்- விரேந்திர சேவாக்."

Leave a comment

Your email address will not be published.


*