இலங்கை சுற்றுப் பயணத்திற்கு இந்திய அணி பயிற்சியாளராகிறார் திராவிட்

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஜூலை மாதம் இந்திய அணி இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற மாட்டார்கள், ஐபிஎலில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். இந்த அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்படப் போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. ராகுல் திராவிட்தான் பயிற்சியாளராக செயல்படுவார் என அப்போது பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.

ராகுல் திராவிட் 2019ஆம் ஆண்டு முதல் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்குப் பயிற்சியாளராக செயல்பட்ட போது, அணியைச் சிறப்பாக வழிநடத்திப் பல இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு அனுப்பினார். ‘நீங்கள் இந்திய அணிக்குத் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட வேண்டும்’ என பிசிசிஐ நிர்வாகிகள் திராவிட்டிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதனை அவர் ஏற்கவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை சுற்றுப் பயணத்திற்கு ராகுல் திராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசுகையில். “திராவிட் தற்போது இந்திய ஏ அணி வீரர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை சுற்றுப் பயணத்திற்கு பயிற்சியாளராகச் செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். திராவிட் இளம் வீரர்களுக்கு ஏற்கனவே பயிற்சியளித்த அனுபவம் உள்ளது. இதனால், இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இளம் இந்திய அணிக்கு இவரால் சிறப்பாகப் பயிற்சி வழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய அணியில் மூத்த வீரராக ஷிகர் தவன் மட்டுமே இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதனால், இவர் அணிக் கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Be the first to comment on "இலங்கை சுற்றுப் பயணத்திற்கு இந்திய அணி பயிற்சியாளராகிறார் திராவிட்"

Leave a comment

Your email address will not be published.


*