இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது

www.indcricketnews.com-indian-cricket-news-061

பெங்களூரு: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வந்தது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்து ஆல்வுட்டானது.தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்திருந்த நிலையில் ரோகித் ஷர்மா டிக்ளேர் செய்தார். 

இதன்மூலம் இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் கருணரத்னே 10(13), குஷல் மெண்டீஸ் 16(26) ஆகியோர் களத்தில் இருக்க ,இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் களமிறங்கிய கருணரத்னே-  குஷல் மெண்டீஸ்  ஜோடியில் கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க , மறுமுனையில் அரைசதம் விளாசிய குஷல் மெண்டீஸ் 54(60) ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய மேத்தியூஸ் 1(5) ரன்னிலும், தனஞ்ஜெயா 4(21) ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் இலங்கை அணி 39 ஓவருக்கு 4 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய டிக்வெல்லா 12(39), அசலங்கா 5(20), எம்புல்தேனியா 2(22), லக்மல் 1(4), ஃபெர்னான்டோ 2(6) என மறுமுனையில் தொடர்ச்சியாக வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் சதம் விளாசிய கருணரத்னே 107(174) ரன்கள் எடுத்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 59.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டும் சேர்த்து , 238 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும்,அஷ்வின் 4 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம், இந்திய அணி எவ்வித நெருக்கடியும் இல்லாமல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

மேலும் இந்த வெற்றி இந்தியா தொடர்ச்சியாக பெறும் 15வது வெற்றியாகும்.அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.