இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியின் வெற்றியை எளிதாக தன்வசப்படுத்திய இந்தியா.

www.indcricketnews.com-indian-cricket-news-0110

லக்னோ: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல்  போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இருப்பினும் 11வது ஓவரில் ரோகித் ஷர்மா 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 44(32) ரன்கள் எடுத்தபோது லகிரு குமராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷான் சதமடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் 16வது ஓவரில் 10 பவுண்டரி,3 சிக்ஸர் உட்பட 89(56) ரன்கள் எடுத்து ,ஷனகா வீசிய பந்தால் கேட்ச்சாகி நடையைக்கட்டினார்.

இதனையடுத்து மூன்றாவதாக களமிறங்கி சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி,2 சிக்ஸர் உட்பட 57(28)ரன்களுடனும், தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 3(4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருவரும் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்து அசத்தியது.

இதனைத்தொடர்ந்து  200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான பதும் நிசாங்கா,புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து புவனேஷ்வர் குமாரின் மூன்றாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான காமிலா மிஷாரா 13(12) ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய  சாரித் அசலங்கா 53(47) ரன்களுடன் ஆட்டமிழக்காமல்  இறுதிவரை களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய லியானகே 11(17), விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமால் 10(9),கேப்டன் தசுன் ஷனாகா 3(6) ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் எதுவும் அடிக்காமல் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 10வது ஓவரிலேயே  5 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் அணியை காப்பாற்ற களமிறங்கிய சாமிகா கருணரத்னே மற்றும் சமீரா ஆகியோர் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்க முயற்சி செய்த நிலையில், கருணரத்னே 21(14 ) ரன்கள் எடுத்தபோது வெங்கடேஷ் ஐயர் வீசிய 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

சமீரா 24(14) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணியால் 20 ஓவருக்கு 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.