இரண்டாம் நாள் முடிவில் இலங்கையை 28/1 என்று இந்தியா கட்டுப்படுத்தியது

www.indcricketnews.com-indian-cricket-news-059

பெங்களூர்:  இந்தியா- இலங்கை இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதையடுத்து டிக்வெல்லா 13(29), எம்புல்டேனியா 0(8) இருவரும் களத்தில் இருக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் பும்ராவின் பந்துவீச்சு மூலம் எம்புல்தேனியா 1(16) ரன்னிலும், திக்வெல்லா 21(38) ரன்னிலும் பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனையடுத்து களமிறங்கிய லக்மல் 5(9) ரன்னிலும், ஃபெர்னான்டோ 8(8) ரன்னிலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 10 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்று  இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா- மாயங் அகர்வால் ஜோடியில் அகர்வால் 22(34) ரன்களில் எம்புல்டேனியா பந்துவீச்சால் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரோகித் 46(79) ரன்களில் மேத்தீயூஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விஹாரி 35(79) ரன்களில் ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 13 ரன்களில் ஜெயவிக்ரமா பந்துவீச்சால் எல்பிடபள்யூவாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து  ரிஷப் பந்த்-ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்த  ரிஷப் பந்த் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 50(31) ரன்களில், ஜெயவிகர்மா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 40 ஆண்டுகால கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

இதையடுத்து மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 9 பவுண்டரி உட்பட 67(87) ரன்களை எடுத்து, எம்புல்டேனியா பந்துவீச்சில் எல்பிடபள்யூவாகி நடையைக் கட்டினார். இதன்மூலம் பகலிரவு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 22(45) ,அஸ்வின் 13(25),அக்ஸர் படேல் 9(10) ஆகியோர் பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்காததால், இந்தியா 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்திருந்த நிலையில் ரோகித் ஷர்மா டிக்ளேர் செய்தார்.  இதன்மூலம் இலங்கைக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது.

இந்த இலக்கை துரத்திக் களமிறங்கியுள்ள இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான திரிமன்னே 0(3), பும்ரா பந்துவீச்சில் எல்பிடபள்யூவாகி நடையைக்கட்டினார். இதையடுத்து களமிறங்கிய கருணரத்னே 10(13), குஷல் மெண்டீஸ் 16(26) ஆகியோர் களத்தில் இருக்க ,இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 7 ஓவருக்கு 1 விக்கெட் இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.