இரண்டாக உடையும் இந்திய அணி: பிசிசிஐ , அதிரடி முடிவு? ?

இந்திய அணியை இரண்டாகப் பிரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-21 வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இதே நேரத்தில் இலங்கையில் ஆசியக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்திய அணிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. .

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி இஷான் மணி, “இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குத் தகுதிபெறும் பட்சத்தில் ஆசியக் கோப்பையை 2023ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா என்ன மாதிரியான முடிவினை எடுக்கும் என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகி தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ளார். .

“இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்ளும் அதேவேளையில் ஆசியக் கோப்பையும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அநேகமாக, ஆசியக் கோப்பைக்கு விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத அணி செல்லும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிற்கு முன்னணி வீரர்கள் கொண்ட குழு பயணிக்கும். இது முடிந்ததும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இது அனைத்தையும் கருத்தில் கொண்டு பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்” எனத் தெரிவித்தார். .

இதன்மூலம், ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இல்லாத வீரர்கள் பட்டியலை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்குமுன் 2016ஆம் ஆண்டு டி20 தொடராக நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றது. 2018ஆம் ஆண்டு ஒருநாள் தொடராக நடைபெற்றபோதும் இந்திய அணி வென்றது. இந்த வருடமும் இந்திய அணி வென்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் இத்தொடரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். .

எதிர்வரும் ஆசியக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. . .

Be the first to comment on "இரண்டாக உடையும் இந்திய அணி: பிசிசிஐ , அதிரடி முடிவு? ?"

Leave a comment

Your email address will not be published.


*