இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

www.indcricketnews.com-indian-cricket-news-050

திருவனந்தபுரம்: உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ,கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து தோனியின் தலைமையில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும்  இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸில் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கிட்டதட்ட 7 வருடங்கள் தண்டனை அனுபவித்து வந்த ஸ்ரீசாந்த், நீதிமன்றத்தை நாடினார்.இறுதியாக 2019ஆம் ஆண்டு தண்டனை ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி,2020ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்த முழு தடையும் நீக்கப்பட்டது.

இதையடுத்து 2021ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் கேரள அணியில் இடம்பெற்றார். இருப்பினும்  அத்தொடர் அந்த வருடம் நடைபெறவில்லை. தொடர்ந்து , தனது பெயரை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறச் செய்தார். ஆனால் எந்தவொரு அணியும் இவரை வாங்க முன்வரவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு  கேரளாவுக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் ஸ்ரீசாந்த் , கடந்த மாதம் மேகாலயாவுக்கு எதிராக நடந்த போட்டியில்  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை  27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள ஸ்ரீசாந்த்,  முதல்தர கிரிக்கெட் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

அதில், “மிகுந்த சோகத்துடன் கணத்த இதயத்துடன் சொல்கிறேன் இன்று எனக்கு வருத்தமான நாள்.ஆனாலும் இது  நன்றியுணர்வின் நாளாக உள்ளது. அடுத்த தலைமுறைக்காக,  இத்தோடு எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தராது.இருப்பினும் இந்த நேரத்தில் இந்த முடிவு சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன். பல்வேறு லீக் மற்றும் அணிகள்,எர்ணாகுளம் மாவட்ட அணி, கேரள மாநில கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, வார்விக்ஷயர் கவுண்டி  அணி, இந்தியன் ஏர்லைன்ஸ் அணி மற்றும் ஐசிசி என எல்லாவற்றிக்குமாக விளையாடியதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்”.

மேலும், ” எனது 25 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் போட்டி, ஆர்வம் விடாமுயற்சி என உயர்ந்த தரத்துடன் விளையாடி வெற்றியை பெற்றுள்ளேன். எனது அணியினர் ,குடும்பம் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன் . கிரிக்கெட்டை விரும்பும் அனைவரையும் நான் விரும்புகிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.