இந்திய டி20 அணியில் முக்கியப் பங்களிப்பிற்காக பிசிசிஐ நிர்வாகம் எம்எஸ் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100335

மும்பை: அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்து ஏமாற்றியது.

மேலும் இத்தோல்விக்கான காரணங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், தோனி போன்ற ஒரு கேப்டன் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் போற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஐசிசி கோப்பைகளை நாட்டுக்காக வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனியை இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஆலோசகராக இல்லாமல் டி20 கிரிக்கெட்டில் தோனியின் பங்கு அதிகளவில் இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏனெனில் 3 வடிவ அணிகள் காரணமாக வேலை பளு அதிகரித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு சமாளிப்பது கடினமாக உள்ளது. எனவே டி20 கிரிக்கெட் அணியின் இயக்குநராக தோனிக்கு நிரந்தர பதவி வழங்கவுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆலோகராக எம்எஸ்தோனி இடைக்கால பணியாற்றி இருந்தார். இருப்பினும் மிக குறுகிய காலம் மட்டுமே அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டதால் பெரியளவில் தாக்கம் ஏற்படவில்லை. இனி இயக்குநராக தோனி செயல்படுவார் என்பதால் இந்திய அணியில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஆனால் கிரிக்கெட்டிலிருந்து முழுவதும் ஓய்வு பெற்றவருக்கே நிரந்தர பதவிகள் வழங்கப்படும். அந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் முழுவதுமாக ஓய்வு பெற்றுவிடுவார். அதன் பிறகு அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்பதால், இந்த பதவிக்காக தோனிக்கு அதிகாரப்பூர்வ கடிதமும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இதனை தோனி ஏற்றுக்கொள்வாரா அல்லது மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் எனத் தெரிகிறது. எனவே வரும் ஜனவரி மாதம் முதல் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தோனி – ஹர்திக் பாண்டியா ஆகியோரது கூட்டணி எப்போதுமே வெற்றிகரமாக இருந்துள்ளதால் ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Be the first to comment on "இந்திய டி20 அணியில் முக்கியப் பங்களிப்பிற்காக பிசிசிஐ நிர்வாகம் எம்எஸ் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*