இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

www.indcricketnews.com-indian-cricket-news-100173
Renuka Thakur of India celebrates the wicket of Chanida Sutthiruang of Thailand during the Women’s T20 Asia Cup 2022 1st semi final match between India women and Thailand women at the Sylhet International Cricket Stadium, Sylhet, Bangladesh on the October 13th, 2022. Photo by Deepak Malik / CREIMAS for Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

சில்ஹெட்: மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றுவருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் வங்கதேசத்தின் சில்ஹெட் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 13(14) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி அசத்தினார்.

இருப்பினும் ஷஃபாலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42(28) ரன்களோடு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 27(26) ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 36(30) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரிச்சா கோஷ் 2(5) மற்றும் தீப்தி ஷர்மா 3(5) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதில் தாய்லாந்து அணி தரப்பில் சொர்ணரின் டிப்போச் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  இதையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய தாய்லாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் நருமோல் சாய்வாய் 21(41) ரன்களும், நாட்டாய பூச்சாதம் 21(29) ரன்களும் எடுத்திருந்தனர். ஆனால் அந்த அணியின் மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் தாய்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும்,ஸ்னே ராணா, ஷஃபாலி வர்மா, ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணியை வீழ்த்தி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு 8வது முறையாக தகுதிபெற்றுள்ளது. மேலும் அக்டோபர் 15-ஆம் தேதியன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன .இதில் இலங்கையை வீழ்த்தி ஆசியக் கோப்பையை 7வது முறையாக  இந்திய அணி கைப்பற்றுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Be the first to comment on "இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி, மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது."

Leave a comment

Your email address will not be published.


*