இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

www.indcricketnews.com-indian-cricket-news-100165
Mohammed Siraj of India celebrates the wicket of Reeza Hendricks of South Africa during the 3rd ODI match between India and South Africa held at the Arun Jaitley Stadium, Delhi, India on the 11th October 2022 Photo by Ron Gaunt / Sportzpics for BCCI

புது டெல்லி: இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய கறளமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் டி காக் 6(10) ஜனிமேன் மலான் 15(27), ரீஸா ஹென்ரிக்ஸ் 3(21), எய்டன் மார்க்ரம் 9(19) ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததால்,

தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டு இழப்பிற்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் மட்டும் போராடி 34(42) ரன்கள் குவித்திருந்த நிலையில், கேப்டன் டேவிட் மில்லர் 7(8), மார்கோ ஜான்சன் 14(19), அண்டில் பெஹ்லுக்வாயோ 5(5), ஃபார்ச்சூன் 1(5), அன்ரிச் நார்ட்ஜே 0(1) ஆகியோர் பெரியளவில் சோபிக்கத் தவறியதால், தென்னாப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களிலேயே வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்திய அணியின் சார்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 8(14) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி நடையைக்கட்டினர்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில்-இஷான் கிஷன் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்தி வந்தனர். இந்நிலையில் ஃபார்ச்சூன் பந்துவீச்சால் இஷான் 10(18) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 49(57) ரன்கள் எடுத்தபோது லுங்கி நெகிடி பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

இறுதியில் 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 28(23) ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 2(4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனால் 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மேலும் இத்தோல்வியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்க அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது."

Leave a comment

Your email address will not be published.


*