இந்திய அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034927
MUMBAI, INDIA - NOVEMBER 02: Mohammed Shami of India celebrates the wicket of Dushan Hemantha of Sri Lanka during the ICC Men's Cricket World Cup India 2023 between India and Sri Lanka at Wankhede Stadium on November 02, 2023 in Mumbai, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

மும்பை: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா- ஷுப்மன் கில் ஜோடியில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித் அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார்.

இவரைத்தொடர்ந்து கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும் கில் 92(92) ரன்களிலும், கோஹ்லி 88(94) ரன்களிலும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

இதையடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல்-ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், ராகுல் 21(19) ரன்களுக்கும், அடுத்துவந்த  சூர்யகுமார் யாதவ் 12(9) ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னும் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 82(56) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் முகமது ஷமி 2(4) ரன்களுக்கு ரன் அவுட்டாக, ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 35(24) ரன்கள் சேர்த்து ரன் அவுட்டாகி ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரரான பதும் நிஷங்கா ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதற்பந்திலேயே  ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, தொடர்ந்து 2ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் தனது முதற்பந்தில் திமுத் கருணரத்னேவையும், 5ஆவது பந்தில் சதீரா சமர விக்ரமாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸும் 1(10) ரன் மட்டுமே எடுத்து சிராஜிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த சரித் அசலங்கா 1(24) ரன்னிலும், அடுத்துவந்த துஷன் ஹெமந்தா ரன்கள் ஏதுமின்றியும் முகமது ஷமி வீசிய 10ஆவது ஓவரின் அடுத்தடுத்த பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 12(25) ரன்களிலும், அடுத்து களமிறங்கிய துஷ்மந்தா சமீரா ரன்கள் ஏதுமின்றியும், கசுன் ரஜிதா 14(17) ரன்களிலும் என முகமது ஷமி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால்  19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன்,  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறி அசத்தியுள்ளது.

Be the first to comment on "இந்திய அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தனர்."

Leave a comment

Your email address will not be published.


*