இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பந்துவீச்சு மோசமாக இருந்ததே காரணம்- முகமது கைஃப்

www.indcricketnews.com-indian-cricket-news-10034112

மும்பை: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (டிச:4) நடந்துமுடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை  தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மற்றும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஆகியவையே இந்திய அணியின் அதிர்ச்சிகரமான தோல்விக்கு காரணம்  என்று அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், “9 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. ஆனால் வங்கதேச அணி பேட்டிங் மோசமாக இருந்தும், பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை இந்திய பவுலர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் நம்முடைய டெத் பவுலர் யார்? தீபக் சஹாரா அல்லது குல்தீப் சென்? அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை தவறவிட்டோம்.

அதற்காக நாம் ராகுலை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சமீபகாலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இருப்பினும் நல்ல ஃபீல்டரான கே.எல்.ராகுல் தான் டி20 உலகக் கோப்பை தொடரில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார். ஆனால் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்காமல் ஒரு விக்கெட்டை தவறவிட்டார். அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் இப்போட்டியில் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.

நாம் அழுத்தம் காரணமாக நிறைய தவறுகளை செய்தோம். ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ பால்களை வீசினோம். நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற அழுத்தத்திற்கு எல்லாம் அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர்கள் உயரே பறக்கிறார்கள்.

தொடர்ச்சியாக நாம் அழுத்தத்தில் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம் வசம் இருந்த வெற்றியை, மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி கடைசி நேரத்தில் வங்கதேசத்தை வெற்றிபெற வைத்துவிட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பந்துவீச்சு மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்கள் கடைசி 10 ஓவர்களில் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்” இவ்வாறு கைஃப் கருத்து தெரிவித்தார்.

Be the first to comment on "இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன்ஷிப் மற்றும் பந்துவீச்சு மோசமாக இருந்ததே காரணம்- முகமது கைஃப்"

Leave a comment

Your email address will not be published.


*