இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் ஷர்மாவிற்கு அடுத்து இவர்தான்-  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்

www.indcricketnews.com-indian-cricket-news-10034383

மும்பை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி  2 -1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி கண்டது மட்டுமின்றி வரும் ஜூன் 6ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுசுச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரை வென்று கொடுத்து கேப்டன் ரோஹித் ஷர்மா குடும்ப காரணங்களுக்காக  முதலாவது ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கவுள்ளது.

தற்போது 29 வயதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக முதன்முறையாக பொறுப்பேற்றது மட்டுமின்றி முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். சமீபகாலமாக டி20ல் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிற்குள் நுழைந்துள்ளார்.50 ஓவர் போட்டியில் கேப்டனாக அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “குஜராத் டைட்டன்ஸ் மற்றும் இந்திய அணிக்கு டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி என்னை மிகவும் கவர்ந்தது. மும்பையில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக ஹர்திக் பாண்டியா வெற்றிபெற செய்யும் பட்சத்தில், நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் அவரால் இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

நடுவரிசை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவர், ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறமை கொண்டவர்.  ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் வெற்றிக்காக எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து, அதற்கேற்ப பேட்டிங் வரிசையில் தன்னை தானே உயர்த்திக் கொண்டார் .

ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படும் போட்டிகளிலெல்லாம் அணி வீரர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி இயல்பாக இருப்பதை பார்க்கலாம். அணியில் உள்ள வீரர்களை சிறப்பாக கையாளும் ஹர்திக் பாண்ட்யா, அவர்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். ஒரு வீரர் எந்தவித அழுத்தமும் இன்றி சௌகரியமாக உணரும்போது, அவர்களிடமிருந்து இயல்பான ஆட்டம் வெளிவரும். வீரர்களை நன்கு ஊக்கப்படுத்தும் ஹர்திக் பாண்ட்யா அனைத்து அழுத்தங்களையும் தன்மீது போட்டுக்கொள்கிறார்” இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Be the first to comment on "இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் ஷர்மாவிற்கு அடுத்து இவர்தான்-  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்"

Leave a comment

Your email address will not be published.


*