இந்திய அணிக்கு இமாலய இலக்கு: கரை சேருமா?

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 338/10 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 312/6 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, இந்திய அணிக்கு 407 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி 98/2 ரன்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில் தற்போது நான்காவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

நான்காவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் முடிந்தபோது ஆஸ்திரேலிய அணி 312/6 ரன்கள் எடுத்து டிக்ளேர் அறிவித்த நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆடியதால், ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு ஷாக் ஏற்பட்டது. அணியின் சராசரி ரன் விகிதத்தை மூன்றுக்கும் குறையாமல் பார்த்துக்கொண்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 50+ ரன்களை கடந்ததால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகரித்தது.

இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஷுப்மன் கில் 31 (64) ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுமுனையில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இறுதியில் அவரும் 52 (98) ரன்கள் எடுத்துப் பேட் கம்மின்ஸ் வேகத்தில் சிக்கி பெவிலியன் திரும்பினார்.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வெளியேறிய நிலையில், தற்போது சேத்தேஸ்வர் புஜாரா 9* (29), கேப்டன் அஜிங்கிய ரஹானே 4* (14) களத்தில் உள்ளனர். நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வரும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா களமிறங்க முடியாத சூழ்நிலை இருப்பதால் போட்டி ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக முடிய வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என இரு தரப்பும் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதால் நாளைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற, மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி செஷனின்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த முகமது சிராஜ், ஜஸ்பரித் பும்ரா ஆகியோரை கடுஞ்சொற்களால் சிலர் வசைபாடியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்திய அணிக்கு இமாலய இலக்கு: கரை சேருமா?"

Leave a comment

Your email address will not be published.


*