இந்தியா-லீசெஸ்டயர் முதல்நாள் பயிற்சி ஆட்டம்:நட்சத்திர வீரர்களின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஸ்ரீகர் பரத் இந்திய அணியை வழிநடத்தினார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10619

லீசெஸ்டர்: இந்தியா-லெஸ்டர்சர் அணிகளுக்கு இடையேயான நான்குநாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் பயிற்சி ஆட்டம் நேற்று கிரேஸ் ரோடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லெஸ்டர்சர் அணிக்காக களமிறங்கினர்.

மேலும் இப்பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா-சுப்மன் கில் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் அதிரடியாக விளையாட முற்பட்ட சுப்மன் கில் 4 பவுண்டரி உட்பட 21(28) ரன்கள் அடித்தபோது டேவிஸ்-ன் பந்துவீச்சால் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, மறுமுணையில் தவறுதலாக புல் ஷாட் ஆடிய ரோகித் ஷர்மா 3 பவுண்டரி உட்பட 25(47) ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி வெறும் 3(23) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணாவின் லெந்த் பால் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை வீரரான ரவிந்திர ஜடேஜா அதிரடியாக விளையாட முற்பட்டு 2 பவுண்டரி உட்பட 13(13) ரன்களில் வெளியேறினார். இதனால் உணவு இடைவேளைவரை இந்திய அணி 28 ஓவருக்கே 90/5 எடுத்து தடுமாறியது.

இந்நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி-ஸ்ரீகர் பரத் ஜோடியில் பந்துகளை துல்லியமாக எதிர்கொண்ட கோலி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 32(60) ரன்களுடனும், மறுமுணையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பரத் 11(44) ரன்களுடன் களத்திலிருக்க, மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 37.2 ஓவருக்கு 133/5 ரன்களை எடுத்திருந்தது.

மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரோமன் வாக்கர் பந்துவீச்சில் 33(69) ரன்களுக்கு விராட் கோலி எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் 6(4) ரன்கள் மட்டுமே எடுத்து ரோமன் வாக்கரிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் நீண்டநேரம் களத்திலிருந்த பரத் அரைசதம் விளாச, தொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவ் 4 பவுண்டரி உட்பட 23(32) ரன்கள் எடுத்தபோது ஜோய் எவிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் முதல்நாள் பயிற்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய அணி 60.2 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

இதில் 8 பவுண்டரி,1 சிக்ஸர் விளாசிய பரத் 70(111) ரன்களுடனும், முகமது ஷமி 2 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 18(26) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

Be the first to comment on "இந்தியா-லீசெஸ்டயர் முதல்நாள் பயிற்சி ஆட்டம்:நட்சத்திர வீரர்களின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஸ்ரீகர் பரத் இந்திய அணியை வழிநடத்தினார்."

Leave a comment

Your email address will not be published.


*