புதுடில்லி: ”கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நிதி திரட்டும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத வேண்டும்,” என சோயப் அக்தர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு தொடர்கள் ரத்தாகின. இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இதற்காக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 44, புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூழ்நிலை தற்போது மோசமாக உள்ளது. இதை தடுக்க உதவும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத வேண்டும். இப்போட்டியில் முடிவு எப்படி இருந்தாலும் இரு நாட்டு மக்களும் வரவேற்பர்.
கோஹ்லி சதம் அடித்தாலும் சரி, பாபர் ஆசம் சதம் விளாசினாலும் சரி இரு நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சி தான். மைதானத்தில் எது நடந்தாலும் இரு அணியினரும் வெற்றி பெற்றவர்களாக இருக்கட்டும்.
இத்தொடரை அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசிப்பர். இதில் கிடைக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அவற்றை கொரோனா வைரசை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு நிதியாக கொடுக்கலாம்.
தொடர் எங்கே
இப்போதைய நிலையில் எல்லோரும் வீட்டுக்குள் தான் உள்ளோம். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் தான் மீண்டும் விளையாட்டு போட்டிகள் நடக்கத் துவங்கும். நிலைமை மாறும் போது, இரு அணிகள் மோதும் தொடரை பொது இடமான துபாயில் நடத்தலாம்.
இத்தொடர் நடக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இரு நாடுகள் இடையிலான உறவில் ஒருவேளை நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவால் தடுமாறுகிறது. இவற்றில் இருந்து மீண்டு வர அதிகமான பணம் தேவைப்படும்.
இப்போதுள்ள அசாதாரண சூழலில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். இந்தியா எங்களுக்கு 10,000 உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்கினால், பாகிஸ்தான் அதை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
மற்றபடி இது எனது கருத்து தான். இரு நாட்டு பிரதிநிதிகள் தான் தொடர் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா–பாக்., கிரிக்கெட் தொடர்? * ‘கொரோனா’ எதிர்ப்புக்கு அக்தர் ‘ஐடியா’

Be the first to comment on "இந்தியா–பாக்., கிரிக்கெட் தொடர்? * ‘கொரோனா’ எதிர்ப்புக்கு அக்தர் ‘ஐடியா’"