இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் நாளில் கே.எல்.ராகுல் சதம் அடித்து ஆதிக்கம் செலுத்தினார்.

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதியான நேற்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் ,டாஸ் வென்ற  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இருவரும் தென்னாப்பிரிகாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில், மாயங் அகர்வால் 36 ரன்கள் எடுக்கும்போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை  குவின்டன் டி காக் தவறவிட்டார்.  இருப்பினும், மாயங் அகர்வால் 40.2 ஓவரில் 9 பவுண்டரி உட்பட  60(123) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய செதேஷ்வர் புஜாரா முதல் பந்திலேயே ஷாட் லேக்கில் நின்ற லுங்கி கிடியிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். 

ஒரே ஓவரில் லுங்கி கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் ,கே.எல்.ராகுலுக்கு ஜோடியாக நான்காவதாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசி ரசிகர்களின் மனக்குறையை போக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 பவுண்டரி உட்பட 35(94)ரன்கள் சேர்த்த போது தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார்.

இதனைத்தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த முன்னாள் துணை கேப்டனான அஜிங்க்யா ரஹானே, சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதில்,சிறப்பாக விளையாடி அந்நிய மண்ணில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்து இந்தியாவுக்கான 14 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டிய கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் சதம் அடித்த 2வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆனார்.

இதற்கு முன்னர், ஜனவரி 2007 இல் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 116 ரன்கள் எடுத்த ஜாஃபர், தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆவார்.  மேலும் ,நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.இதில், ரஹானே 8 பவுண்டரி உட்பட 40(81) ரன்களுடனும், கே.எல்.ராகுல் 1 சிக்ஸர் 17 பவுண்டரி உட்பட 122(248) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்தாலே இந்தியாவின் வெற்றி பிரகாசமாகிவிடும்.