இந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நாளை நடக்கிறது. இதனை அடுத்து மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே வருகிற 4 , 6, 8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். அவரது காயம் குணமடைய நாள் பிடிக்கும் என்பதால் அவர் எஞ்சிய கடைசி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முறையே 69, 83 ரன்கள் சேர்த்த வார்னர் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாகும்.

காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் வார்னர் டெஸ்ட் போட்டி தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இடக்கை பேட்ஸ்மேன் டார்சி ஷார்ட் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயதான டார்சி ஷார்ட் 8 ஒருநாள் மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆஸ்திரேலிய அணியின் இங்கிலாந்து பயணத்தில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அதனை அடுத்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் போட்டிகளில் கலந்து கொண்ட அவர் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. 2-வது போட்டியில் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த நிலையில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் வகையில் கம்மின்சுக்கு எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment on "இந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் – டார்சி ஷார்ட் சேர்ப்பு"

Leave a comment

Your email address will not be published.